ஸ்ரீ அனுமன் வாலின் பெருமை

அனுமனின் வாலின் பெருமை

 

 

வாயுகுமாரனின் வாலில் பொட்டு வைத்து வணங்குவதன் பெருமை என்ன?

 

அனுமன் சூரியனிடம் குருவாகக் கொண்டு பாடம் கேட்டு வலம் வந்த போது மற்றய கிரகங்கள் சூரியனையும் அனுமனையும் வலம் வந்தன.

 

இலங்கையில் ராவணன் அனுமனின் வாலுக்கு தீ வைத்தபோது சீதாபிராட்டி வேண்டியதால் வெம்மையும் குளிர்ச்சியாகவே இருந்தது. நெருப்பினால் ஏற்படும் காயங்களிலிருந்து குணம் அடைய அனுமனை ஆராதியிங்கள்.

 

ராவணனின் சபையில் அனுமன் தன் வாலால் ஏற்படுத்திய சிம்மாசனத்தில் அமர்ந்தார். அமர்ந்து ராவணின் கர்வத்தை அடக்கினார்.

 

அனுமனின் பெருமை அவரது வாலைப் போலே நீண்டுள்ளது. அனுமனின் வாலிற்கு மேலும் எத்தனையோ சிறப்புகள் உள்ளன.

திருமண தடை நீக்கும் வால் பொட்டு வழிபாடு

அன்பு, அறம், அருள் ஆகியவற்றின் முழு வடிவமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சநேயர் வாலில் நவகிரகங்களும் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் பூஜித்து வந்தால் நவகிரகங்களை வழிபட்டதற்கு ஒப்பாகும். இந்தப் பூஜையானது நவகிரகப் பூஜைக்குச் சமமாகக் கருதப்படுகிறது.

முதன் முதலில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வால் வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது. பீமன் பாரிஜாத மலரைத் தேடி காட்டில் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். களைப்படைந்த நிலையில் அவன் சென்று கொண்டிருந்த போது வழியின் குறுக்கே குரங்கின் வால் ஒன்று இடைïறாக இருந்தது.

அது ஆஞ்சநேயரின் வால் என்பதை அறியாத பீமன், பாதையை விட்டு உன் வாலை நகர்த்து என்று கோபமாகக் கூறினார். அதற்கு ஆஞ்சநேயர், முதுமையின் காரணமாக என் வாலை நகர்த்த முடியாமல் படுத்திருக்கிறேன். நீயே வாலை ஓரமாக நகர்த்தி வைத்து விட்டுப் போ என்றார். பீமன் அலட்சியத்தோடு வாலை அகற்ற முயல, அது அசையவில்லை.

பலமுறை கடுமையாக முயற்சித்தும் வாலை நகர்த்த முடியவில்லை. பீமன் மலைத்து நிற்க, அனுமனே தன்னுடைய வாலை நகர்த்திக்கொண்டு, தான் வாயுபுத்திரனான அனுமன் என்று கூறி பீமனை ஆசிர்வதித்தார். தான் கோபப்பட்டதற்காக தன்னை மன்னிக்கும்படி வேண்டிய பீமன், அனுமனின் வலிமையை வியந்து பாராட்டி, அனுமனையும் அனுமனின் வாலையும் வணங்கினான்.

மேலும், எனக்கு சர்வ சக்திகளையும் மங்களங்களையும் அளித்து வாழ்த்தியது போல், தங்கள் வாலைப் பூஜித்து வழிபடுபவர்களுக்கும் சகல சவுபாக்கியங்களையும் அருள வேண்டும் என வரம் வேண்டினான். அவ்வாறே அனுமனும் வரம் அருள, அனுமன் வாலை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

அனுமனது வாலை வணங்குபவர்கள் தாங்கள் பூஜிக்கும் ஸ்ரீ அனுமன் படத்தில், உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியில் பொட்டு வைக்க வேண்டும். முதலில் சந்தனப் பொட்டு வைத்து அதன் மேல் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து வாலின் நுனி வரை பொட்டு வைக்க வேண்டும்.

வால் நுனியில் பொட்டு வைத்து முடிக்கின்ற நாளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினம் ஆஞ்சநேயர் நாமத்தையும் ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும்.

இவ்வாறு அனுமன் வாலை வழிபட்டால் நினைத்த காரியத்தில் பூரண வெற்றி கிடைக்கும். திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயர் வால் வழிபாடு செய்வதன் மூலம் பார்வதி தேவியின் அருள் பெற்று விரைவில் திருமண பாக்கியம் பெறுவர்.