சுந்தரகாண்டம் எளிய வழியில்

சுந்தரகாண்டம் பாராயணம் எளிய வழியில்

 

ஸ்ரீ சீதா ராம லக்ஷ்மண பரத சத்ருக்ண அனுமத் சமேதா சரணம்

வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டம் 66 சர்க்கங்களை உடையது. இதை தினமும் பாராயணம் செய்வது என்பது சிரமம். எனவே, சுந்தரகாண்ட பாராயணத்தை எளிய வழியில் தினமும் முழுமையாக வாசித்து பலன் பெற, இதோ… இந்த எளிய பாடலைப் படித்து மகிழுங்கள்.

 

சுந்தரகாண்ட பாராயணம் மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் உரிய பலன் கிடைக்கும்.

 

ஸ்ரீ ராம ஜெயம்

சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்

இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்

கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன

கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது

அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே

ஆயத்தமாகி நின்றான்

இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி

இராஜகம்பீரத்தோடு இரமாதூதன் சென்றான்.

 

அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்

அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!

வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள்

வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!

 

மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க

மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து

சரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்து

சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான்.

 

இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை

இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான்

அழகான இலங்கையில் அன்னை ஜானகியை

அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான்.

 

சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்

சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்

ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட

வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க !

 

கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி

சூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்

அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு

அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.

 

பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர்

பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க

வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்

வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.

 

அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்

அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.

ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான்

அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.

 

ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்

ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை என்றான்.

வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி

சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்.

 

மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து

ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான்.

ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ

அனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான்.

 

அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை

அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான்.

அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்

அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு.

 

(எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ அங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து மனம் போல நீர் சொரிந்து

ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனே உனை பணிகின்றோம் பலமுறை)

 

ஸ்ரீமத் ராமாயணம்/ சுந்தர காண்டம் பாராயணம் செய்யும்போது, அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை/ சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும். ‘ராம’ நாமம் எங்கு ஒலித்தாலும் ஆஞ்சநேயர் அங்கே பிரஸன்ன மாவார் என்பது ஐதிகம். அவர் அமருவதற்காகத்தான் அந்த ஆசனம்.